1சிலநாட்கள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன்னுடைய மனைவியைப் பார்க்கப்போய்: நான் என்னுடைய மனைவியின் அறைக்குள் போகவேண்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளேபோகவிடாமல்:
2நீ அவளை முழுவதும் பகைத்துவிட்டாய் என்று நான் நினைத்து, அவளை உன்னுடைய நண்பனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன்; அவளுடைய தங்கை அவளைவிட அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்று சொன்னான்.
3அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தர்களுக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,
4புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக்கட்டி,
5பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தர்களின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சை தோட்டங்களையும் ஒலிவ தோப்புக்களையும் சுட்டெரித்துப்போட்டான்.
6இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர்கள் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனான சிம்சோன்தான்; அவனுடைய மனைவியை அவனுடைய நண்பனுக்குத் திருமணம் செய்துகொடுத்ததினால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.
7அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்காமல் ஓயமாட்டேன் என்று சொல்லி,
8அவர்களைத் தொடையிலும் இடுப்பிலுமாக துண்டுதுண்டாக வெட்டி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகையில் குடியிருந்தான்.
9அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், யூதாவிலே முகாமிட்டு, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.