32இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
33ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.
34அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
35தேவன் தங்களுடைய கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
36ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
37அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.
38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
39அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
40எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
41அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.
42அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
43அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
44அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.
45அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
46அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
47கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
48அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
49தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.