1ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல். என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.
2என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.
3அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
4பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
5அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
6இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
7தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
8இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
9ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
10அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,
11அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
12அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
13கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார்.
14பகலிலே மேகத்தினாலும், இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
15பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
16கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
17என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள்.
18தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
19அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி: தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?
20இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள்.
21ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
22யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது.
23அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,
24மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
25தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார்.
26வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
27இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து,