21உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போனது! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிமக்கள் கொலைபாதகர்கள்.
22உன் வெள்ளி களிம்பானது; உன் திராட்சைரசம் தண்ணீர்க்கலப்பானது.
23உன் பிரபுக்கள் முரடர்களாகவும், திருடர்களின் நண்பர்களுமாக இருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் லஞ்சத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரிப்பதில்லை; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.
24ஆகையால் சேனைகளின் யெகோவாவும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்கிறதாவது; ஓகோ, நான் என் எதிரிகளில் கோபம் தணிந்து, என் பகைவர்களை பழிவாங்குவேன்.
25நான் என் கையை உன் பக்கமாகத் திருப்பி, உன் கலப்படம் நீங்க உன்னைச் சுத்தமாகப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
26உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரர்களை முதலில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய்.
27சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.