18நியாயப்பிரமாணத் தலைவனின் தூண்டுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; மக்களின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள்” என்று பாடினார்கள்.
19அந்த வனாந்திரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும்,
20பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.
21அப்பொழுது இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி:
22“உமது தேசத்தின் வழியாகக் கடந்துபோகும்படி உத்திரவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சைத்தோட்டங்களிலும் போகாமலும், கிணறுகளின் தண்ணீரைக் குடிக்காமலும், உமது எல்லையைக் கடந்துபோகும்வரை ராஜபாதையில் நடந்துபோவோம்” என்று சொல்லச்சொன்னார்கள்.
23சீகோன் தன்னுடைய எல்லை வழியாகக் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்திரவு கொடாமல், தன்னுடைய மக்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்திரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.