6ஆசரிப்புக்கூடாரத்தின் வேலையைச் செய்ய, யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரர்களாகிய லேவியர்களை நான் இஸ்ரவேல் சந்ததியாரிலிருந்து பிரித்து, உங்களுக்கு பரிசாகக் கொடுத்தேன்.
7ஆகையால் நீயும் உன்னோடேகூட உன்னுடைய மகன்களும் பலிபீடத்திற்கும் திரைக்கு உட்புறத்திற்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்வதற்காக, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கவேண்டும்; உங்களுடைய ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு பரிசாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படவேண்டும்” என்றார்.
8பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப் படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினால் அவைகளை உனக்கும் உன் மகன்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்.
9மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாக இருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லா உணவுபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் பரிசுத்தமாக இருக்கும்.