17ஆகையால் யெகோவா நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,
18என்னுடைய ஆண்டவருடைய வல்லமை பெரிதாக விளங்குவதாக.
19உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த மக்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த மக்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.
20அப்பொழுது யெகோவா: “உன்னுடைய வார்த்தையின்படியே மன்னித்தேன்.
21பூமியெல்லாம் யெகோவாவுடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
22என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும்,
23அவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்.
24என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாக இருக்கிறபடியாலும், உத்தமமாக என்னைப் பின்பற்றி வந்தபடியாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரும்படிச்செய்வேன்; அவனுடைய சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.