30பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் முகாமிலே வந்து சேர்ந்தார்கள்.
31அப்பொழுது யெகோவாவிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, முகாமிலும் முகாமைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, அந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
32அப்பொழுது மக்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இரவுமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாகச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளை முகாமைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள்.
33தங்களுடைய பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று சாப்பிடும்முன்னே யெகோவாவுடைய கோபம் மக்களுக்குள்ளே மூண்டது; யெகோவா மக்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.