4என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவள்.
5உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் கருமையான கூந்தல் கீலேயாத் மலையிலே இலைகள்மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
6உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
7உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
8ராணிகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியர்களுக்குத் தொகையில்லை.
9என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.