35உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
36இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
37இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.
38சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே.
39இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
40ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
41அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.
42அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,