23ஆகவே, நாங்கள் உமக்குச் சொல்லுகிறதை நீர் செய்யவேண்டும்; அது என்னவென்றால், தேவனிடம் பொருத்தனை செய்துகொண்ட நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
24இவர்களை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு போய், இவர்களோடு உம்மை சுத்திகரிப்புச் செய்துகொண்டு, இவர்கள் முடி வெட்டிக்கொள்வதற்கு வேண்டிய செலவையெல்லாம் நீரே செய்யும். அப்படிச் செய்தால் அவர்கள் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய் என்றும், நீ மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறவரென்றும் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்.
25விசுவாசிகளான யூதரல்லாதவர்கள் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், கழுத்தை நசுக்கி கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும் இருக்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பினோம் என்றார்கள்.
26மறுநாளிலே பவுல் அந்த நான்கு மனிதர்களோடு சேர்ந்து தானும் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலியை செலுத்தி முடிக்கும்வரைக்கும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தான்.
27அந்த ஏழு நாட்களும் நிறைவேறும்பொழுது ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, மக்களெல்லோரையும் தூண்டிவிட்டு, அவனைப் பிடித்து:
28இஸ்ரவேலர்களே, உதவிசெய்யுங்கள். நம்முடைய மக்களுக்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த இடத்திற்கும் எதிராக எல்லா இடத்திலும் எல்லோருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்த பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
29எபேசு பட்டணத்தைச் சேர்ந்த துரோப்பீமு என்பவன் நகரத்தில் பவுலோடு இருக்கிறதை ஏற்கனவே பார்த்திருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்திற்கு உள்ளேயும் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தார்கள்.
30அப்பொழுது நகரம் முழுவதும் கலக்கம் உண்டானது; மக்கள் கூட்டமாக ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது.