23அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள்.
24மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
25பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
26பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான்.
27அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
28அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோடு கலந்து அவனிடத்தில் போக்கும் வரத்துமாக இருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார்.
29ஆகவே, நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.
30அதற்குக் கொர்நேலியு: நான்கு நாட்களுக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, பிற்பகல் மூன்று மணியளவில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த மனிதன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:
31கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது.
32யோப்பா பட்டணத்திற்கு ஆள் அனுப்பி, பேதுரு என்னும் மறுபெயர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.
33அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்லது; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் கேட்க நாங்கள் எல்லோரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.
34அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,
35எந்த இனமாக இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்குப் பிரியமானவன் என்றும் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன்.
36எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தை நற்செய்தியாகக் கூறி, இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பின வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களே.
37யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே.