1தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்தில் உள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடு முழுவதும் உள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறது என்னவென்றால்:
2நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதலின் தேவனுமாக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
4தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எப்படிப்பட்ட உபத்திரவங்களிலும் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்கிறவர்களாவதற்கு, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.
5எப்படியென்றால், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடம் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
6எனவே, நாங்கள் உபத்திரவப்பட்டாலும், அது உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் ஆறுதல் அடைந்தாலும், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகித்துக்கொள்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் தருகிறது.
7நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம்.
8எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது.
9நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம்.
10அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம்.
11அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
12உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.
13ஏனென்றால், நீங்கள் படித்தும் புரிந்தும் இருக்கிற விஷயங்களைத்தவிர, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுவரைக்கும் அப்படியே புரிந்துகொள்வீர்கள் என்று நம்பியிருக்கிறேன்.
14கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
15நான் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவனாக இருக்கிறதினால், உங்களுக்கு இரண்டாவதுமுறையும் பிரயோஜனம் உண்டாவதற்காக, முதலாவது உங்களிடம் வரவும்,
16பின்பு உங்களுடைய ஊர்வழியாக மக்கெதோனியா நாட்டிற்குப் போகவும், மக்கெதோனியாவைவிட்டு மீண்டும் உங்களிடம் வரவும், உங்களால் யூதேயா நாட்டிற்கு நான் வழியனுப்பப்படவேண்டும் என்றும் யோசனையாக இருந்தேன்.
17இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், இல்லை இல்லை என்கிறதும், என்னிடத்திலே இருப்பதற்காக, நான் யோசிக்கிறவைகளை சரீரத்தின்படி யோசிக்கிறேனோ?
18நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் என்றும் இல்லை என்றும் இல்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.
19என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும், இல்லை என்றும் இல்லாமல், ஆம் என்றே இருக்கிறார்.
20எங்களால் தேவனுக்கு மகிமை உண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவிற்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
21உங்களோடு எங்களையும் கிறிஸ்துவிற்குள் உறுதிப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.
22அவர் நம்மை முத்திரை செய்து, நம்முடைய இருதயங்களில் ஆவியானவரை உத்திரவாதமாகக் கொடுத்திருக்கிறார்.
23மேலும் நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் இதுவரைக்கும் கொரிந்து பட்டணத்திற்கு வராமல் இருக்கிறேன் என்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாக வைக்கிறேன்.
24உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாக இல்லாமல், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பதால், உங்களுடைய சந்தோஷத்திற்கு உதவியாக இருக்கிறோம்.