10“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் விளைச்சலை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
11உங்களுக்காக அது அங்கீகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் யெகோவாடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
12நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
13யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய உணவுபலியையும், திராட்சைப்பழ ரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
14உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்தநாள்வரை, அப்பமும் வாட்டிய கதிரையும் பச்சைக்கதிரையும் சாப்பிடவேண்டாம்; இது உங்களுடைய குடியிருப்புகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
15“நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் முடிந்தபின்பு,
16ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்வரை கணக்கிட்டு, யெகோவாவுக்குப் புதிய உணவுபலியைச் செலுத்தக்கடவீர்கள்.