Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - மத்

மத் 8

Help us?
Click on verse(s) to share them!
1இயேசு மலையிலிருந்து இறங்கினபோது, திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
2அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்கு விருப்பமானால், என்னை சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்றான்.
3இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
4இயேசு அவனைப் பார்த்து: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.
5இயேசு கப்பர்நகூமில் நுழைந்தபோது, நூறு படைவீரர்களுக்குத் தலைவனாகிய ஒருவன் அவரிடத்தில் வந்து:
6ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே பக்கவாதமாகக் கிடந்து மிகவும் வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
7அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார்.
8அந்தத் தலைவன் மறுமொழியாக: ஆண்டவரே! நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான்.
9நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.
10இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப்பின்னே வருகிறவர்களைப் பார்த்து: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு பந்தியிருப்பார்கள்.
12ராஜ்யத்தின் பிள்ளைகளோ, வெளியில் உள்ள இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
13பின்பு இயேசு அந்தத் தலைவனைப் பார்த்து: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அதே மணிநேரத்திலே அவனுடைய வேலைக்காரன் சுகமானான்.
14இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்து, அவனுடைய மாமியார் ஜூரமாகப் படுத்திருந்ததைக் கண்டார்.
15அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
16மாலைநேரமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, வியாதியஸ்தர்கள் எல்லோரையும் சுகமாக்கினார்.
17அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
18பின்பு, திரளான மக்கள் தம்மைச் சுற்றியிருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்.

19அப்பொழுது, வேதபண்டிதன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
20அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
21அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான்.
22அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம் செய்யட்டும், நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
23அவர் படகில் ஏறினபோது அவருடைய சீடர்கள் அவருக்குப் பின்னேசென்று ஏறினார்கள்.
24அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.
25அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும், மரித்துப்போகிறோம் என்றார்கள்.
26அதற்கு அவர்: விசுவாசக்குறைவுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டானது.
27அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
28அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால், அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது.
29அவர்கள் அவரைப் பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள்.
30அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
31அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
32அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிகளுக்குள் சென்றன; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின.
33அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள்.
34அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.