2மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார்.
3பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம்.
4மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே.
5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும்.
6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும்.
7துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால், அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள்.
8குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன்.
9சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
10துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது.
11பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
12நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.