4என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
5யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
6வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்?
7தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர்.
8சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
9தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர்.
10நீர் ராகாபை வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர்.
11வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
12வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும்.
13உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகை உன்னதமானது.
14நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
15கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
16அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
17நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்.
18யெகோவாவால் எங்களுடைய கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
19அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
20என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்; என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும்.
22எதிரி அவனை நெருக்குவதில்லை; துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை.
23அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
24என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும்.
25அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும், அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
26அவன் என்னை நோக்கி: நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
27நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன்.