38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
39அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
40எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
41அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.
42அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
43அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
44அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.
45அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
46அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
47கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
48அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
49தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
50அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
51எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;
52தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
53அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது.