1அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
2ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும்,
3அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படமாட்டோம். (சேலா)
4ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும்.
5தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார்.
6தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது.
7சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)