12நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள்.
13அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை.
14நான் அவனை என்னுடைய நண்பனாகவும் சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன்.
15ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள்.
16அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள்.
17ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.