41வௌ. யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
42அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
43சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
44நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
45நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், அகலமான பாதையில் நடப்பேன்.
46நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
47நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன்.
48நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
49சாயீன். நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
50அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது.
51பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
52யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
53உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது.
54நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது.
55யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
56நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், இது எனக்குக் கிடைத்தது.
57ஹெத். யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
58முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும்.
59என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
60உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதிக்காமல் விரைந்தேன்.
61துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
62உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன்.
63உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன்.
64யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
65தேத். யெகோவாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாக நடத்தினீர்.
66உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன்.