5என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ, அவன் கையிலிருக்கிறது என் கோபத்தின் தண்டாயுதம்.
6அவபக்தியான மக்களுக்கு விரோதமாக நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின மக்களைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
7அவனோ அப்படி நினைக்கிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் மக்களை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.
8அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
9கல்னோபட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆனதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
10எருசலேமையும் சமாரியாவையும்விட விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
11நான் சமாரியாவுக்கும், அதின் சிலைகளுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் சிலைகளுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்கிறான்.
12ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.