21மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.
22இஸ்ரவேலே, உனது மக்கள் கடலின் மணலளவு இருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும்.
23சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தேசம் முழுவதற்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.
24ஆகையால் சீயோனில் குடியிருக்கிற என் மக்களே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.
25ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்திற்குள்ளே என் கடுங்கோபமும், அவர்களைச் அழிக்கப்போகிறதினால் என் கோபமும் தணிந்துபோகும் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.
26ஓரேப் கன்மலையின் அருகிலே மீதியானியர்கள் வெட்டுண்டதுபோல் சேனைகளின் யெகோவா அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பிவரச்செய்து, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.
27அந்நாளில் உன் தோளிலிருந்து அவன் சுமையும், உன் கழுத்திலிருந்து அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோகும்.
28அவன் ஆயாத்திற்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் பொருட்களை வைத்திருக்கிறான்.