11அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: நீர் இந்த மக்கள் எல்லோருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரச்செய்தது ஏன்? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்காமல் போனது ஏன்?
12இவர்களுடைய முன்னோர்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திற்கு நீ இவர்களை பால்குடிக்கிற குழந்தையைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன்னுடைய மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடு சொல்லும்படி இந்த மக்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?
13இந்த மக்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே.
14இந்த மக்கள் எல்லோரையும் நான் ஒருவனாகத் தாங்கமுடியாது; எனக்கு இது மிஞ்சின பாரமாக இருக்கிறது.
15உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என்னுடைய உபத்திரவத்தை நான் காணாதபடி இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்” என்று வேண்டிக்கொண்டான்.