8எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளியின் தோழிகள்
9பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? மணவாளி
10என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.
11அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது; அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும், காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
12அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது.
13அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
14அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.