11அவன் எங்களிடம் வந்து, பவுலினுடைய இடுப்பில் கட்டியிருந்த கச்சையை உருவி தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சைக்கு சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர்கள் பிடித்து இதேபோல கட்டி யூதரல்லாதவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
12இதைக் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அங்கே இருந்தவர்களும் பவுலை வேண்டிக் கேட்டுக்கொண்டோம்.
13அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் சோர்ந்து போகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் தயாராக இருக்கிறேன் என்றான்.
14அவன் சம்மதிக்காததினாலே, கர்த்தருடைய சித்தம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டோம்.
15அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பயணத்திற்கான சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
16செசரியா பட்டணத்திலுள்ள சீடர்களில் சிலர் எங்களோடு வந்தார்கள். சீப்புரு தீவைச்சேர்ந்த மினாசோன் என்னும் ஒரு பழைய சீடனிடம் நாங்கள் தங்குவதற்காக அவனையும் அவர்களோடு கூட்டிக்கொண்டுவந்தார்கள்.
17நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர்கள் எங்களை சந்தோஷமாக வரவேற்றார்கள்.
18மறுநாளிலே பவுல் எங்களை யாக்கோபிடம் கூட்டிக் கொண்டுபோனான்; மூப்பர்களெல்லோரும் அங்கே கூடிவந்தார்கள்.
19பவுல் அவர்களை வாழ்த்தி, தன் ஊழியத்தினாலே தேவன் யூதரல்லாதோர்களிடம் செய்தவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கிச்சொன்னான்.
20யாக்கோபும் அங்கு இருந்தவர்களும் அதைக்கேட்டுக் கர்த்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் பவுலைப் பார்த்து: சகோதரனே, யூதர்களில் ஆயிரக்கணக்கானோர் விசுவாசிகளாக இருப்பது உமக்குத் தெரியும், அவர்கள் எல்லோரும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கவனமாக கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறார்கள்.
21யூதரல்லாதோர்களோடு இருக்கிற யூதர்களெல்லோரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கவும் வேண்டியதில்லை என்று நீர் சொல்லி, அவர்கள் மோசேயைவிட்டுப் பிரிந்துபோகும்படி போதனை செய்கிறீர் என்று இவர்கள் உம்மைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
22இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என்று அவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கோபத்தோடு இங்கு வருவார்கள். எனவே உம்மைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டது உண்மையில்லை என்பதைக் காட்ட நீ ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டும்.
23ஆகவே, நாங்கள் உமக்குச் சொல்லுகிறதை நீர் செய்யவேண்டும்; அது என்னவென்றால், தேவனிடம் பொருத்தனை செய்துகொண்ட நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.