Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - அப் - அப் 16

அப் 16:13-40

Help us?
Click on verse(s) to share them!
13ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்திற்கு வெளியேபோய் ஆற்றின் அருகே வழக்கமாக ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த பெண்களுக்குப் போதித்தோம்.
14அப்பொழுது தியத்தீரா ஊரைச்சேர்ந்த விலையுயர்ந்த சிவப்பு கம்பளம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொன்னவைகளைக் கவனிப்பதற்காக கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தார்.
15அவளும் அவள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றப்பின்பு, அவள் எங்களைப் பார்த்து: நான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று நீங்கள் நினைத்தால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள்.
16நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போகும்போது குறிசொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள்.
17அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனிதர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்கள், இரட்சிப்பின் வழியை நமக்குத் தெரிவிக்கிறவர்கள் என்று சத்தமாக சொன்னாள்.
18அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: நீ இவளைவிட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளைக் கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியேபோனது.
19அவளுடைய எஜமான்கள் தங்களுடைய வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.
20அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி,
21ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர்.
22அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;
23அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள்.
24அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான்.
25நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது.
27சிறைச்சாலைக்காரன் தூக்கம் தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போனான்.
28அப்பொழுது, பவுல் சத்தமிட்டு: நீ உனக்கு எந்தத் தீங்கையும் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம் என்றான்.
29அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிப்போய், நடுங்கி, பவுலுக்கும் சீலாவிற்கும் முன்பாக விழுந்து,
30அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான்.
31அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
32அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
33மேலும் அந்த இராத்திரி நேரத்திலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடுகூட இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
34பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாக இருந்தான்.
35பொழுதுவிடிந்தபின்பு: அந்த மனிதர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் காவலர்களை அனுப்பினார்கள்.
36சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலைசெய்யும்படி அதிகாரிகள் கட்டளைக் கொடுத்து அனுப்பியுள்ளார்கள்; எனவே நீங்கள் இப்பொழுது புறப்பட்டு சமாதானத்தோடு போங்கள் என்றான்.
37அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரிக்காமல், வெளிப்படையாக அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாக எங்களை விடுதலை செய்கிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை விடுதலைசெய்து வெளியே அனுப்பிவிடட்டும் என்றான்.
38காவலர்கள் இந்த வார்த்தைகளைச் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் ரோமர்கள் என்று அதிகாரிகள் கேட்டபொழுது பயந்துவந்து,
39அவர்களோடு தயவாகப்பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.
40அப்படியே அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளின் வீட்டிற்குப்போய், சகோதரர்களைப் பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டுப்போனார்கள்.

Read அப் 16அப் 16
Compare அப் 16:13-40அப் 16:13-40