Text copied!
Bibles in Tamil

2 இராஜாக்கள் 15:4-19 in Tamil

Help us?

2 இராஜாக்கள் 15:4-19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.
5 யெகோவா இந்த ராஜாவை வாதித்ததால், அவன் தன் மரணநாள்வரை தொழுநோயாளியாக இருந்து, தனித்து ஒரு வீட்டிலே குடியிருந்தான்; ராஜாவின் மகனாகிய யோதாம் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
6 அசரியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
7 அசரியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
8 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருட ஆட்சியில் யெரொபெயாமின் மகனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறு மாதங்கள் ஆட்சிசெய்து,
9 தன் முன்னோர்கள் செய்ததுபோல, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
10 யாபேசின் மகனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, மக்களுக்கு முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
11 சகரியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
12 உன் மகன்கள் நான்காம் தலைமுறைவரை இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று யெகோவா யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே நிறைவேறியது.
13 யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருட ஆட்சியில் யாபேசின் மகனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் ஆட்சிசெய்தான்.
14 காதியின் மகனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் மகனாகிய சல்லூமை சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
15 சல்லூமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த சதித்திட்டமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
16 அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சா தொடங்கி அதின் எல்லைகளையும் தாக்கினான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லையென்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் கர்ப்பங்களையெல்லாம் கிழித்துப்போட்டான்.
17 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் ஆளுகை வருடத்தில், காதியின் மகனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருடங்கள் அரசாட்சிசெய்து, அவன் தன் நாட்களிலெல்லாம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
18 இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகாதிருந்தான்.
19 அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாக வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் அரசாட்சியை தன் கையில் பலப்படுத்துவதற்காக, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.
2 இராஜாக்கள் 15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்