Text copied!
Bibles in Tamil

1 இராஜா 7:35-51 in Tamil

Help us?

1 இராஜா 7:35-51 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

35 ஒவ்வொரு கால்களின் தலைப்பகுதியிலும் 3/4 அடி உயரமான வட்டவடிவ கட்டும், ஒவ்வொரு காலினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் பலகைகளும் இருந்தது.
36 அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் பலகைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பனை மரங்களுடைய சித்திர வேலைகளை செய்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், வாய்க்கால்களிலும் இருக்கும் இடங்களுக்குத் தகுந்தபடி செய்தான்.
37 இப்படியாக அந்தப் 10 கால்களையும் செய்தான்; அவைகளெல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரேவித கொத்து வேலையுமாக இருந்தது.
38 10 வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரையும் 40 குடம் பிடிக்கும்; 6 அடி அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் 10 கால்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது.
39 5 கால்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், 5 கால்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குநோக்கி வைத்தான்.
40 பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாக ஈராம் யெகோவாவுடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.
41 அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப் பின்னல்களும்,
42 தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் செய்த இரண்டு வரிசை மாதுளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னல்களுக்கும் 400 மாதுளம்பழங்களும்,
43 10 கால்களும், கால்களின்மேல் வைத்த 10 கொப்பரைகளும்,
44 ஒரு கடல் தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற 12 காளைகளும்,
45 செம்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; யெகோவாவின் ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிப்பொருட்களும் சுத்தமான வெண்கலமாக இருந்தது.
46 யோர்தான் நதிக்கு அடுத்த சமமான பூமியிலே, சுக்கோத்திற்கும் சர்தானுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா இவைகளை வார்த்தான்.
47 இந்தச் சகல பணிப்பொருட்களின் வெண்கலம் மிகவும் ஏராளமாக இருந்ததால், சாலொமோன் அவைகளை எடை பார்க்கவில்லை; அதினுடைய எடை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.
48 பின்னும் யெகோவாவுடைய ஆலயத்திற்குத் தேவையான பணிப்பொருட்களையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் பொன் மேஜையையும்,
49 மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடும் உண்டாக்கினான்.
50 பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகாபரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான மொட்டுகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான மொட்டுகளையும் செய்தான்.
51 இப்படியாக ராஜாவாகிய சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்திற்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்செய்யும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் கொண்டுவந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
1 இராஜா 7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்