19 அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
20 பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
21 இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
22 அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.
23 அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.
24 ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
25 அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
26 அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
27 அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான்.
28 அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.
29 மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.
30 அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
31 பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
32 பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே.
33 அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
34 அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள்.