12 இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
13 அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.
14 இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
15 அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
16 இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
17 மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
18 நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19 இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார்.
20 பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான்.