13 அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் சாப்பிடுகிறீர்கள் என்றார்.
14 ஆகவே நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகத் தொழுதுகொண்டு, உங்களுடைய பிதாக்கள் ஐபிராத்து நதிக்கு அப்பாலும் எகிப்திலும் தொழுதுகொண்ட தெய்வங்களை அகற்றிவிட்டு, யெகோவாவைத் தொழுதுகொள்ளுங்கள்.
15 யெகோவாவைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய முற்பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றான்.
16 அப்பொழுது மக்கள் மறுமொழியாக: வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்படி, யெகோவாவை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாக இருப்பதாக.
17 நம்மையும் நம்முடைய முற்பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா மக்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய யெகோவா தானே.
18 தேசத்திலே குடியிருந்த எமோரியர்கள் முதலான எல்லா மக்களையும் யெகோவா நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகவே நாங்களும் யெகோவாவைத் தொழுதுகொள்ளுவோம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.
19 யோசுவா மக்களை நோக்கி: நீங்கள் யெகோவாவைத் தொழுதுகொள்ளமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னிக்கமாட்டார்.
20 யெகோவா உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் யெகோவாவை விட்டு, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை அழிப்பார் என்றான்.
21 மக்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றார்கள்.
22 அப்பொழுது யோசுவா மக்களை நோக்கி: யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
23 அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்களுடைய நடுவே இருக்கிற அந்நிய தெய்வங்களை அகற்றிவிட்டு, உங்களுடைய இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
24 அப்பொழுது மக்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவாவையே தொழுதுகொண்டு, அவருடைய சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.
25 அந்தப்படி யோசுவா அந்த நாளில் சீகேமிலே மக்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களுக்கு அதைப் பிரமாணமாகவும் கட்டளையாகவும் ஏற்படுத்தினான்.
26 இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே யெகோவாவுடைய பரிசுத்த இடத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழே நட்டு,
27 எல்லா மக்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாக இருப்பதாக; யெகோவா நம்மோடு சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்களுடைய தேவனுக்கு எதிராகப் பொய்சொல்லாதபடி, இது உங்களுக்குச் சாட்சியாக இருப்பதாக என்று சொல்லி.