20 ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.
21 ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
22 ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;
23 நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான்.
24 அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
25 உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
26 அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
27 உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்.
28 அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
29 அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
30 அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள்.
31 அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது.
32 அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள்.