14 துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
15 அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ.
16 தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.
17 அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
18 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.
19 துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.
20 என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.
21 அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.
22 அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
23 எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.
24 வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
25 உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
26 உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும்.
27 வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.