7 இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
8 மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக.
9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும்.
10 எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.
11 தங்களுடைய தகப்பனைச் சபித்தும், தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு.
12 தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு.
13 வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.
14 தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு.
15 கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு.