21 பென்யமீனின் மகன்கள் எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களையும் துரத்திவிடவில்லை; எனவே, எபூசியர்கள் இந்த நாள்வரை பென்யமீன் மக்களோடு எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
22 யோசேப்பின் குடும்பத்தினரும் பெத்தேலுக்கு எதிராகப் போனார்கள்; யெகோவா அவர்களோடு இருந்தார்.
23 யோசேப்பின் குடும்பத்தினர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பெயர்.
24 அந்த வேவுகாரர்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனிதனைக் கண்டு: பட்டணத்திற்குள் நுழையும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
25 அப்படியே பட்டணத்திற்குள் நுழையும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்தில் உள்ளவர்களைக் கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, அந்த மனிதனையும் அவனுடைய குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
26 அப்பொழுது அந்த மனிதன் ஏத்தியர்களின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பெயரிட்டான்; அதுதான் இந்த நாள்வரை அதினுடைய பெயர்.
27 மனாசே கோத்திரத்தார்கள் பெத்செயான் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தானாக் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தோரில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், இப்லேயாம் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், மெகிதோவில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும் துரத்திவிடவில்லை; கானானியர்கள் அந்த தேசத்தில்தான் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்.
28 இஸ்ரவேலர்கள் பலத்தபோது, கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல் அவர்களை கட்டாயப்படுத்தி கடினமாக வேலை செய்யவைத்தார்கள்.
29 எப்பிராயீம் கோத்திரத்தார்கள், கேசேரிலே குடியிருந்த கானானியர்களையும் துரத்திவிடவில்லை; ஆகவே, கானானியர்கள் அவர்களோடு குடியிருந்தார்கள்.