Text copied!
Bibles in Tamil

நியாயாதி 11:21-40 in Tamil

Help us?

நியாயாதி 11:21-40 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
22 யாப்போக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள்.
23 இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா?
24 உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் பிடித்துக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் பிடித்துக்கொள்கிறோம்.
25 மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா?
26 இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியின் அருகே எல்லா ஊர்களிலும், முந்நூறு வருடங்கள் குடியிருக்கும்போது, இவ்வளவு காலமாக நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன?
27 நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய யெகோவா இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.
28 ஆனாலும் அம்மோன் மக்களின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்காமற்போனான்.
29 அப்பொழுது யெகோவாவுடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான்.
30 அப்பொழுது யெப்தா யெகோவாவுக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால்,
31 நான் அம்மோன் மக்களிடத்திலிருந்து சமாதானத்தோடு திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது யெகோவாவுக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
32 யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; யெகோவா அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
33 அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.
34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோது, இதோ, அவன் மகள் தம்புரு வாசித்து நடனமாடி, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளை; அவளைத்தவிர அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை.
35 அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ, என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் யெகோவாவை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.
36 அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் யெகோவாவை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் மக்களாகிய உம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் யெகோவா உமக்குக் கட்டளையிட்டபடியால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.
37 பின்னும் அவள் தன்னுடைய தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என்னுடைய தோழிகளும் என்னுடைய கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதங்கள் தவணைகொடும் என்றாள்.
38 அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,
39 இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன்னுடைய தகப்பனிடம் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் செய்திருந்த தன்னுடைய பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் திருமணம் ஆகாத கன்னியாகவே வாழ்ந்து மரித்து விட்டாள்.
40 இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.
நியாயாதி 11 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்