25 தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார்.
26 வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
27 இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து,
28 அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.
29 அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்.
30 அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை; அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே.
31 தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.
32 இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
33 ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.
34 அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
35 தேவன் தங்களுடைய கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
36 ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
37 அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.
38 அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
39 அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
40 எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
41 அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.
42 அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
43 அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
44 அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.
45 அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
46 அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
47 கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
48 அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
49 தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
50 அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
51 எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;
52 தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
53 அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது.
54 அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
55 அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
56 ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,
57 தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி, துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
58 தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
59 தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
60 தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
61 தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
62 தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
63 அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள்.