28 உன்னுடைய தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்களுக்காக உண்டாக்கியதை பலப்படுத்தும்.
29 எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக, ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
30 நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், மக்களாகிய கன்றுகளோடுகூட கன்றுகளின் கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற மக்களைச் சிதறடிப்பார்.
31 பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையை உயர்த்த துரிதப்படும்.
32 பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா)
33 ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார்.
34 தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.
35 தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.