143 துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி.
144 உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
145 கோப். முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
146 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
147 அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
148 உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும்.
149 உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.
150 தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள்.
151 யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
152 நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன்.
153 ரேஷ். என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறக்கமாட்டேன்.
154 எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
155 இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள்.
156 யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
157 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன்.
158 உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாக இருந்தது.
159 இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
160 உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
161 ஷீன். அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
162 மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன்.
163 பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
164 உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு தடைகள் இல்லை.