135 உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
136 உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
137 த்சாடே. யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
139 என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது.
140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
141 நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
142 உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.