Text copied!
Bibles in Tamil

அப் 21:20-31 in Tamil

Help us?

அப் 21:20-31 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 யாக்கோபும் அங்கு இருந்தவர்களும் அதைக்கேட்டுக் கர்த்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் பவுலைப் பார்த்து: சகோதரனே, யூதர்களில் ஆயிரக்கணக்கானோர் விசுவாசிகளாக இருப்பது உமக்குத் தெரியும், அவர்கள் எல்லோரும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கவனமாக கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறார்கள்.
21 யூதரல்லாதோர்களோடு இருக்கிற யூதர்களெல்லோரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கவும் வேண்டியதில்லை என்று நீர் சொல்லி, அவர்கள் மோசேயைவிட்டுப் பிரிந்துபோகும்படி போதனை செய்கிறீர் என்று இவர்கள் உம்மைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
22 இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என்று அவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கோபத்தோடு இங்கு வருவார்கள். எனவே உம்மைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டது உண்மையில்லை என்பதைக் காட்ட நீ ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டும்.
23 ஆகவே, நாங்கள் உமக்குச் சொல்லுகிறதை நீர் செய்யவேண்டும்; அது என்னவென்றால், தேவனிடம் பொருத்தனை செய்துகொண்ட நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
24 இவர்களை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு போய், இவர்களோடு உம்மை சுத்திகரிப்புச் செய்துகொண்டு, இவர்கள் முடி வெட்டிக்கொள்வதற்கு வேண்டிய செலவையெல்லாம் நீரே செய்யும். அப்படிச் செய்தால் அவர்கள் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய் என்றும், நீ மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறவரென்றும் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்.
25 விசுவாசிகளான யூதரல்லாதவர்கள் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், கழுத்தை நசுக்கி கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும் இருக்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பினோம் என்றார்கள்.
26 மறுநாளிலே பவுல் அந்த நான்கு மனிதர்களோடு சேர்ந்து தானும் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலியை செலுத்தி முடிக்கும்வரைக்கும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தான்.
27 அந்த ஏழு நாட்களும் நிறைவேறும்பொழுது ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, மக்களெல்லோரையும் தூண்டிவிட்டு, அவனைப் பிடித்து:
28 இஸ்ரவேலர்களே, உதவிசெய்யுங்கள். நம்முடைய மக்களுக்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த இடத்திற்கும் எதிராக எல்லா இடத்திலும் எல்லோருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்த பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
29 எபேசு பட்டணத்தைச் சேர்ந்த துரோப்பீமு என்பவன் நகரத்தில் பவுலோடு இருக்கிறதை ஏற்கனவே பார்த்திருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்திற்கு உள்ளேயும் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தார்கள்.
30 அப்பொழுது நகரம் முழுவதும் கலக்கம் உண்டானது; மக்கள் கூட்டமாக ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது.
31 அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சி செய்யும்போது, எருசலேம் முழுவதும் கலக்கமாக இருக்கிறது என்று ரோம இராணுவ அதிபதிக்குச் செய்தி வந்தது.
அப் 21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்