Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 1 இராஜா - 1 இராஜா 8

1 இராஜா 8:21-62

Help us?
Click on verse(s) to share them!
21யெகோவா நம்முடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களோடு செய்த உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு இடத்தை உண்டாக்கினேன் என்றான்.
22பின்பு சாலொமோன்: யெகோவாவுடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையார்கள் எல்லோருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்து:
23இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு நிகரான தேவன் இல்லை; தங்களுடைய முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியார்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர்.
24தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்த நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.
25இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன்னுடைய மகன்களும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஆண்மகன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமல் போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.
26இஸ்ரவேலின் தேவனே, என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று வெளிப்படுவதாக.
27தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
28என்னுடைய தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் இன்று உமக்கு முன்பாக செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கவனத்தில் கொண்டருளும்.
29உமது அடியேன் இந்த இடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் அங்கே இருக்கும் என்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.
30உமது அடியானும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய நீர் தங்குமிடத்திலே அதை கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.
31ஒருவன் தன் அருகில் உள்ளவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பு வந்தால்,
32அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய செய்கையை அவனுடைய தலையின்மேல் சுமரச்செய்து, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத் தகுந்தபடி செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாக உமது அடியார்களை நியாயந்தீர்ப்பீராக.
33உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் எதிரிகளுக்கு முன்பாக தோற்றுப்போய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திற்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
34பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுடைய முன்னோர்களுக்கு நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பி வரச்செய்வீராக.
35அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் வானம் அடைபட்டு மழைபெய்யாமல் இருக்கும்போது, அவர்கள் இந்த இடத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, தங்களை தேவரீர் மனவருத்தப்படுத்தும்போது தங்களுடைய பாவங்களைவிட்டுத் திரும்பினால்.
36பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியார்களும் உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது மக்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக.
37தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, விஷப்பனி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய எதிரிகள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றுக்கையிடும்போதும், ஏதாவது ஒரு வாதையோ வியாதியோ வரும்போதும்,
38உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனிதனானாலும் தன்னுடைய இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்துச் செய்யும் எல்லா விண்ணப்பத்தையும், எல்லா வேண்டுதலையும்,
39நீர் தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,
40தேவரீர் எங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படி தேவரீர் ஒருவரே எல்லா மனிதர்களின் இருதயத்தையும் அறிந்தவராக இருக்கிறபடியால், நீர் அவனவனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத் தகுந்தபடி செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.
41உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் அல்லாத அந்நியர்கள் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே.
42அப்படிப்பட்ட அந்நியனும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக விண்ணப்பம் செய்தால்,
43உமது தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படியும், நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் வைக்கப்பட்டதென்று அறியும்படியும், உம்முடைய நாமத்தை அறிந்துகொள்வதற்காக, அந்த அந்நியன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.
44நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு யுத்தம் செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்தால்,
45பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரிப்பீராக.
46பாவம் செய்யாத மனிதன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களுடைய எதிரிகளுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்த எதிரிகள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகும்போது,
47அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து, அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்களுடைய சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து,
48தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்களுடைய எதிரிகளின் தேசத்திலே தங்களுடைய முழு இருதயத்தோடும் தங்களுடைய முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த தங்களுடைய தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது,
49நீர் தங்குமிடமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரித்து,
50உம்முடைய மக்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்களுடைய துரோகங்களை எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வீராக.
51அவர்கள் எகிப்து என்கிற இரும்புச் சூளையின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படச்செய்த உம்முடைய மக்களும் உம்முடைய சுதந்திரமுமாக இருக்கிறார்களே.
52அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது மக்களாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக.
53கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்யும்போது, உம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் எல்லா மக்களிலும் அவர்களை உமக்குச் சுதந்திரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம் செய்தான்.
54சாலொமோன் யெகோவாவை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் யெகோவாவுடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன்னுடைய கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததைவிட்டு எழுந்து,
55நின்று, இஸ்ரவேல் சபையார் எல்லோரையும் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடு சொன்னது:
56தாம் வாக்குத்தத்தம் செய்தபடியெல்லாம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கொடுத்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் ஒரு வார்த்தைகூட தவறிப்போகவில்லை.
57நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய முன்னோர்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து,
58நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடப்பதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளுவதற்கும், நம்முடைய இருதயத்தை அவர்பக்கமாக திரும்பச்செய்வாராக.
59யெகோவாவே தேவன், வேறொருவரும் இல்லையென்பதை பூமியின் மக்களெல்லாம் அறியும்படியாக,
60அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது மக்களாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்திற்குத் தகுந்தபடி விசாரிப்பதற்கு, நான் யெகோவாவுக்கு முன்பாக விண்ணப்பம்செய்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் இருப்பதாக.
61ஆதலால் இந்த நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவருடைய கட்டளைகளில் நடந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்களுடைய இருதயம் நம்முடைய தேவனாகிய யெகோவாவோடு உத்தமமாக இருப்பதாக என்றான்.
62பின்பு ராஜாவும் அவனோடு இருந்த இஸ்ரவேலர்கள் அனைவரும், யெகோவாவுடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.

Read 1 இராஜா 81 இராஜா 8
Compare 1 இராஜா 8:21-621 இராஜா 8:21-62