Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - லூக் - லூக் 22

லூக் 22:35-58

Help us?
Click on verse(s) to share them!
35பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள்.
36அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும்.
37அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார்.
38அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
39பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள்.
40அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி,
41அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
42பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
43அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான்.
44அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது.
45அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு:
46நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார்.
47அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான்.
48இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
49அவரைச் சுற்றி நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
50அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான்.
51அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார்.
52பின்பு இயேசு தமக்கு விரோதமாக வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்து படைத்தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.
53நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களோடுகூட இருக்கும்போது நீங்கள் என்னைப் பிடிக்கக் முற்படவில்லை; இதுதான் உங்களுடைய நேரமும் இருளின் அதிகாரமுமாக இருக்கிறது என்றார்.
54அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்னேசென்றான்.
55அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
56அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள்.
57அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான்.
58சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான்.

Read லூக் 22லூக் 22
Compare லூக் 22:35-58லூக் 22:35-58