Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - யோவா - யோவா 19

யோவா 19:6-29

Help us?
Click on verse(s) to share them!
6பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான்.
7யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
8பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
9மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.
10அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
11இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார்.
12அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
13பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான்.
14அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.
15அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள்.
16அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
17அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
18அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
19பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது.
20இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது.
21அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
22பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
23படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது.
24அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள்.
25இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
26அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.
27பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான்.
28அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.
29காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.

Read யோவா 19யோவா 19
Compare யோவா 19:6-29யோவா 19:6-29