Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - அப் - அப் 15

அப் 15:7-22

Help us?
Click on verse(s) to share them!
7மிகுந்த வாக்குவாதம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரர்களே, உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி யூதரல்லாதோர் என்னுடைய வாயினாலே நற்செய்தி வசனத்தைக்கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்பே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.
8இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்;
9விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார்.
10இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்?
11கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோம் என்று நம்பியிருக்கிறோமே என்றான்.
12அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அடையாளங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள்.
13அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
14தேவன் யூதரல்லாதோர் கூட்டத்தில் இருந்து தமது நாமத்திற்காக ஒரு மக்கள் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதன்முதலாக அவர்களுக்கு வெளிப்படுத்தின விதத்தை சிமியோன் விளக்கிச் சொன்னாரே.
15அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது.
16எப்படியென்றால், மற்ற மனிதர்களும், என்னுடைய நாமத்தினால் அழைக்கப்பட்ட எல்லா மக்களும், கர்த்த்தரை தேடும்படி,
17நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுத்து, அதில் பழுதானவைகளை மீண்டும் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாம் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
18உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது.
19எனவே யூதரல்லாதோர்களில் தேவனிடத்தில் சேருகிறவர்களைத் தொந்தரவுபண்ணக்கூடாது என்றும்,
20விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
21ஏனென்றால் மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், ஆரம்ப காலம்முதல் எல்லாப் பட்டணங்களிலும் அந்த புத்தகங்களைப் போதிக்கிறவர்களும் உண்டு என்றான்.
22அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவிற்கு அனுப்புகிறது அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும் நலமாகத் தோன்றியது. அவர்கள் யாரென்றால், சகோதரர்களில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்னும் மறுபெயர்கொண்ட யூதாவும் சீலாவுமே.

Read அப் 15அப் 15
Compare அப் 15:7-22அப் 15:7-22